பொருட்கள் வாங்க கடை வீதியில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு


பொருட்கள் வாங்க கடை வீதியில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பொருட்கள் கடை வீதியில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பொருட்கள் கடை வீதியில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தீபாவளி பண்டிகை நாளை (திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு, புதிய ஜவுளிகள், இனிப்பு வகைகள் வாங்க கடை வீதியில் குவிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை பஜார்வீதி, பஸ் நிலைய பகுதி, சின்னக்கடை வீதி, தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. சாலையோர கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு இருந்தது.

சாலையோரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் புதிய துணி வகைகளை ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் உடனுக்குடன் வாகன போக்குவரத்து இடையூறுகளை சரி செய்தனர்.

மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மோட்டார் சைக்கிள்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆட்டோ மூலம் விழிப்புணர்வு

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் அறிவித்து உள்ள நேரத்தில் மட்டுமே பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க வேண்டும் என ஒலி பெருக்கி பொருத்திய ஆட்டோகள் மூலம் திருவண்ணாமலை நகரம் மற்றும் வேங்கிக்கால் பகுதியில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசு, இனிப்பு வகைகள் மற்றும் புதிய ஜவுளிகளை வாங்கி கொண்டு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தீபாவளி அன்று மழை வந்து விடுமோ என்று சிறிது அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.


Next Story