காணும் பொங்கல்: சென்னையில் நாளை சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் காணும் பொங்கலையொட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17-ந்தேதி(நாளை) காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும், குறிப்பாக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சூழ்நிலைக்கு தகுந்தவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-
* காமராஜர் சாலையில் பொதுமக்கள் எண்ணிக்கை சாலையில் அதிகமாகும் வரையில் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
* உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் அதிகளவில் கூடும் போது, வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயின்ட், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை பெரியார் சிலை, அண்ணாசிலை, வெல்லிங்டன் பாயின்ட், ஸ்பென்சர் சந்திப்பு, பட்டுளாஸ் சாலை, மணிக்கூண்டு, ஜி.ஆர்.எச்.பாயின்ட் வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
* அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம். மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழி பாதையாக மாற்றப்படும். வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
* பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
* சென்னை போக்குவரத்து போலீசார் இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் 'கூகுள்' வரைபடத்தில் RoadEase app மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் 'கூகுள் மேப்' மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.