கஞ்சா கடத்தல்
ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தல்
ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோர் அடங்கிய போலீசார் தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ரெயிலில் இருந்து இறங்கி வந்த 5 பேர் ஆளுக்கு ஒரு 'பேக்' வைத்திருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
5 பேர் கைது
இதையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த பேக்கை பார்த்தபோது அதில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராமர்(வயது 40), தேனியை அடுத்த கம்பம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஆசை (28), சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார்(36), சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ரவி மகன் கார்த்தி (27), சென்னை அண்ணாநகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபு(26) என்பது தெரிய வந்தது.
ஆந்திராவில் இருந்து...
இவர்கள் 5 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்னை வந்து அங்கிருந்து தஞ்சைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. தஞ்சை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளனர். இவர்கள் கஞ்சாவை சிறிய, சிறிய பொட்டலங்களாக போட்டு, கல்லூரி மாணவர்கள் மூலம் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளன. இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.