பூண்டி மாதா ஆலயத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது பரிதாபம்: 6 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி சாவு


பூண்டி மாதா ஆலயத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது பரிதாபம்: 6 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி சாவு
x

பூண்டி மாதா ஆலயத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற பக்தர்கள் 6 பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது.

ஆன்மிக சுற்றுலா

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 38), அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ்(36), தாவிதுராஜ்(30) உள்பட 57 பேரை கொண்ட குழுவினர் பூண்டி மாதா பேராலயத்துக்கு நேற்று ஒரு பஸ்சில் ஆன்மிக சுற்றுலாவாக வந்தனர்.

இவர்கள் நேற்று காலை ஆலயம் அருகில் உள்ள கொள்ளிடம் செங்கரையூர் பாலம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

6 பேர் ஆற்றில் மூழ்கினர்

ஆற்றில் நீரோட்டம் மிதமான வேகத்தில் இருந்த நிலையில் ஆற்றில் இறங்கி குளித்தவர்கள் அதன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது சார்லஸ், அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ், தாவிதுராஜ் உள்பட6 பேர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர்.

இதை அந்த வழியாக வந்த மாட்டு வண்டி உரிமையாளர் செல்வம் என்பவர் பார்த்து உடனடியாக ஆற்றில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் 6 பேரும் ஆற்றில் மூழ்கி மாயமாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் உடல்கள் மீட்பு

இதில் சார்லஸ், அவருடைய தம்பி பிரதிவ்ராஜ் உடல்களை தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டதுக்கு பின்னர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து மாயமான மற்றவர்களையும் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் தேடினர்.

தீவிர தேடுதலுக்கு பின்னர் மதியம் 2.15 மணி அளவில் சகோதரர்களின் ஒருவரான தாவிதுராஜ் என்பவரும், மாலை 3.30 மணி அளவில் பிரவீன்ராஜ்(19) என்பவரும் பிணமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து மற்ற 2 பேருடைய உடல்களையும் ேதடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கலெக்டர் ஆய்வு

மீட்பு பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பலியானவர்களின் உறவினர்களுக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.

மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்மிக சுற்றுலாவுக்கு உடன் வந்தவர்கள் ஆற்றில் மூழ்கி பலியானதால் சோகத்தில் இருந்த தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


Next Story