சென்னை பெண்கள் கல்லூரியில் சோகம்: படிக்கட்டில் உருண்டு விழுந்து மாணவி பரிதாப சாவு
சென்னை வேப்பேரி பெண்கள் கல்லூரியில் படிக்கட்டில் உருண்டு விழுந்து காயம் அடைந்த மாணவி பரிதாபமாக இறந்து போனார். கல்லூரி திறந்த முதல் நாளிலேயே நடந்த இந்த சோகச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை வேப்பேரி பகுதியில் வசிப்பவர் சர்மா. இவரது மனைவி சீமா சர்மா. சர்மா தங்கசாலை பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர்களது மகள் ரோஷிணி சர்மா (வயது 19) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி திறந்த முதல் நாளில் மாணவி ரோஷிணி காலை 8 மணிக்கே கல்லூரிக்கு வந்து விட்டார்.
ஆனால் கல்லூரி வகுப்பறைக்கு போகவில்லை. படிக்கட்டு அருகில் மயங்கிய நிலையில் தலையில் பலத்த அடிபட்டு அவர் கிடந்தார். அதைப்பார்த்த கல்லூரி பேராசிரியை ஒருவர் கூச்சல் போட்டு மற்றவர்களை அழைத்தார்.
தலையில் காயம்
மாணவி ரோஷிணி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து போய் விட்டார். அவரது வாயில் முன்பக்க பற்கள் உடைந்து காணப்பட்டது. தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிய நிலையில் இருந்தது.
மாணவி ரோஷிணி படிக்கட்டில் உருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் கல்லூரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மர்ம சாவு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முதல் நாளிலேயே சோகம்
ரோஷிணி காயம் பட்டவுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவர் அடிபட்டு கிடந்ததை தாமதமாகவே பேராசிரியர் பார்த்ததாக தெரிகிறது.
கல்லூரி திறந்த முதல் நாளிலேயே நடந்த இந்த சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.