திருவிழாவில் துயரம்: வைகை ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி - கூட்டநெரிசலில் மயங்கி விழுந்து ஆட்டோ டிரைவரும் உயிரிழப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியானார்கள். கூட்டநெரிசலில் மயங்கி விழுந்து ஆட்டோ டிரைவரும் இறந்தார்.
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியானார்கள். கூட்டநெரிசலில் மயங்கி விழுந்து ஆட்டோ டிரைவரும் இறந்தார்.
வைகை ஆற்றில் மூழ்கி சாவு
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நேற்று நடந்தது. அழகரை தரிசிப்பதற்காக மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வைகையாற்று பகுதிக்கு வந்திருந்தனர். மதுரை யானைக்கல் கல்பாலம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அங்கு அதிகளவு தண்ணீர் இருப்பதை கண்ட இளைஞர்கள் உற்சாகத்தில் தண்ணீரில் குதித்தனர். மேலும் சிலர் அந்த அணை பகுதி வழியாக கள்ளழகரை தரிசிக்க சென்றனர்.
அப்போது தண்ணீரில் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விளக்குத்தூண் போலீசார் விரைந்து சென்று அந்த உடலை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் காலில் ஏற்கனவே காயம் இருந்து, அதில் கட்டு போட்டு இருந்ததாகவும், அவருக்கு 40 வயது இருக்கும் என்றும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தாலும் சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் 2 பேர் இறப்பு
அதே கல்பாலம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் 2 பேர் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இருந்த 2 உடல்களையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் குறித்து விசாரித்த போது அதில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. அவர் மதுரை விளாச்சேரி ஜோசப் நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 18) என்பதும், அவர் உள்பட சிலர் அழகரை தரிசிக்க வந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
மற்றொருவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது 2 கைகளிலும் பிளேடால் கீறிய காயமும், இடது பக்க காதில் தோடும், விரலில் வெள்ளி மோதிரம் இருந்தது.
நெரிசலில் மயங்கி ஆட்டோ டிரைவர் சாவு
மதுரை வடக்கு மாசி வீதி நல்லமாடன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர், சுடலைமுத்து (45). ஆட்டோ டிரைவர். இவர் தனது 13 வயது மகனுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வைகை ஆறு பகுதிக்கு வந்தார். அப்போது ஆழ்வார்புரம் பகுதியில் இருந்து ராமராயர் மண்டபத்திற்கு கூட்ட நெரிசலில் சிரமப்பட்டு கடந்து சென்றுள்ளார். வைகை வடகரை பகுதிக்கு வந்த போது சுடலைமுத்து திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆட்டோவில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுடலைமுத்து ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியது.
10-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம்
மதுரை வைகை ஆற்றில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கூடியதால் மூச்சு திணறி பலர் மயங்கினார்கள். அதில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கலைவாணி (வயது 19) என்பவரும் உண்டு.. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோது உடனடியாக அவரை போலீசார் மீட்டு ஆம்புலன்சுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றினார்கள். இதே போன்று மயக்கம் அடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் மீட்டு முதல் உதவி அளித்து. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.