கருணாநிதி நினைவு நாள் பேரணியில் சோகம்: தி.மு.க. கவுன்சிலர் மயங்கி விழுந்து சாவு


கருணாநிதி நினைவு நாள் பேரணியில் சோகம்: தி.மு.க. கவுன்சிலர் மயங்கி விழுந்து சாவு
x

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கான மவுன ஊர்வலத்தில் சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

சென்னை,

கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணா சாலையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று அமைதி பேரணியாக சென்றனர்.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகமும் பங்கேற்றார்.

இந்த ஊர்வலம் வாலாஜா சாலையை கடந்த போது இவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக ஊர்வலத்தில் வந்த தி.மு.க.வினர் அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஆலப்பாக்கம் சண்முகத்தின் உயிர் பிரிந்தது.

அமைச்சர் அஞ்சலி

தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மரணம் அடைந்த தகவல் அறிந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

மரணம் அடைந்த கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகத்துக்கு வயது 68 ஆகும். இவர் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மதுரவாயல் நகரமன்ற தலைவராக பதவி வகித்துள்ளர். 3 முறை வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது கவுன்சிலர் பதவியுடன் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

தி.மு.க.வில் சென்னை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், தினகரன் என்ற மகனும் உள்ளனர். இதில் தினகரன், தி.மு.க. தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார்.


Next Story