கிணத்துக்கடவில் பரிதாபம் -ஸ்கூட்டர் மீது கார் மோதி தம்பதி பலி


கிணத்துக்கடவில் பரிதாபம் -ஸ்கூட்டர் மீது கார் மோதி தம்பதி பலி
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெட்ரோல் பங்க் ஊழியர்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 62). இவர் கிணத்துக்கடவிலிருந்து கோவை செல்லும் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்பரேட்டராகவும் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சாந்தி (54). இவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் வேலுச்சாமி, சாந்தி ஆகியோருடன் மகன் அருண்குமார் அவரது மனைவி அபிநயா ஆகியோரும் வசித்து வருகின்றனர். நேற்று மாலை வேலுச்சாமி தனது ஸ்கூட்டரில் கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதற்காக கிளம்பினார். அவருடன் அவரது மனைவி சாந்தியும் சென்றார்.

கார் மோதல்

ஸ்கூட்டரை வேலுச்சாமி ஓட்ட, பின்னால் அவரது மனைவி சாந்தி உட்கார்ந்திருந்தார். சிங்கையன்புதூர், சமாதி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் அதிவேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் ரோட்டோரம் உள்ள தோட்டத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் வேலுச்சாமி, அவரது மனைவி சாந்தி இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். காயமடைந்த வேலுச்சாமியை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு வேலுச்சாமி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வேலுச்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த வேலுச்சாமியின் மனைவி சாந்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாந்திக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த பிரபுவிற்கும், காரில் இருந்த அவரது மனைவி ரமா (35) இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர், விபத்தை ஏற்படுத்தியதாக கிணத்துக்கடவைச் சேர்ந்த பிரபு (41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story