நெல்லை அருகே சோகம்:மகள் காதலனுடன் சென்றதால்கணவன்-மனைவி தற்கொலை


தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:27+05:30)

நெல்லை அருகே மகள் காதலனுடன் சென்றதால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை அருகே, மகள் காதலனுடன் சென்றதால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

விவசாயி

நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் செட்டிமலன்பட்டி தேவக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 49), விவசாயி. இவரது மனைவி சங்கரம்மாள் (38). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

கல்லூரி மாணவியான சின்னத்துரை மகளும், வல்லநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

காதலனுடன் சென்ற மகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சின்னத்துரை மகள் வீட்டைவிட்டு வெளியே தனது காதலனுடன் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த சின்னத்துரை அவமானம் தாங்காமல் தனது மனைவியிடம் மகள் இப்படி செய்துவிட்டாளே, இனி எப்படி வெளியில் தலைகாட்ட முடியும் என்று கூறி ஆத்திரத்தில் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வெளியே சென்றுவிட்டார்.

மனைவி தற்கொலை

இதனால் மனமுடைந்த சங்கரம்மாள் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டில் திரண்டனர்.

மேலும் முறப்பநாடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சங்கரம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரும் சாவு

இதற்கிடையே வீட்டில் இருந்து வெளியேறிய சின்னத்துரை சாயர்புரம் அருகே சிவலூர்-அடைக்கலாபுரம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சாயர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, சின்னத்துரையை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்

இந்த சம்பவங்கள் குறித்து முறப்பநாடு, சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் காதலனுடன் சென்றதால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story