பொள்ளாச்சி அருகே பரிதாபம்:எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி சாவு


பொள்ளாச்சி அருகே பரிதாபம்:எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி சாவு
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறந்தார்.

கர்ப்பிணி பெண்

பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் ரொசாரியோ (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனிதா (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வருகின்றனர். இதற்கிடையில் வனிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. கடந்த 24-ந்தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட அன்னூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு இருவரும் சென்றதாக தெரிகிறது. பின்னர் பண்டிகையை கொண்டாடி விட்டு ஊருக்கு வந்த வனிதாவிற்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் மருந்து, மாத்திரைகளை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகும் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். காய்ச்சல் அதிகமாகவும், மூச்சு திணறல் மற்றும் வனிதா கர்ப்பமாக இருந்ததால் அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எலி காய்ச்சல்

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் எலி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பணிக்கம்பட்டியில் பொள்ளாச்சி வடக்கு மருத்துவ அலுவலர் அழகுராஜலட்சுமி தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டனர்.

அந்த பெண்ணின் வீட்டை சுற்றி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று கண்டறிய மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் தொந்தரவு இருந்ததால் மருந்து, மாத்திரைகள் வழங்கி உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரத்த பரிசோதனை

கர்ப்பிணியான வனிதா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட உடன் தனியார் கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அங்கு ரத்த பரிசோதனை செய்தார்களா? என்பது தெரியவில்லை. கடந்த 31-ந்தேதி மூச்சு திணறல், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்த பிறகே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு கொரோனா, டெங்கு, எலி காய்ச்சல், பன்றி காய்ச்சல் உள்பட 5 வகையான காய்ச்சல்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதில் எலி காய்ச்சல் மட்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. எலி காய்ச்சல் நாய், ஆடு, மாடு, எலி போன்றவற்றின் எச்சம், சிறுநீர் கலந்த தண்ணீர் மற்றும் உணவுகளை சாப்பிடுவதால் பரவ கூடும். எனவே அவர் தீபாவளிக்கு அன்னூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்த போது பரவியதா? அல்லது பணிக்கம்பட்டியில் வைத்து பரவியதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் 2 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து எந்த வகையான வைரஸ் காய்ச்சல் என்பதை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story