அந்தியூர் அருகே பரிதாப சம்பவம் கணவர் இறந்த மறுநாளில் மனைவியும் தற்கொலை


அந்தியூர் அருகே பரிதாப சம்பவம்  கணவர் இறந்த மறுநாளில் மனைவியும் தற்கொலை
x

அந்தியூர் அருகே கணவர் இறந்த துயரத்தில் மறுநாளே மனைவியும் தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே கணவர் இறந்த துயரத்தில் மறுநாளே மனைவியும் தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவர் சாவு

அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டபாளையம் நாடார் காலனியை சேர்ந்தவர் அரசாயாள் (வயது 42). இவருடைய கணவர் கருப்புசாமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1-ந் தேதி கருப்புசாமி தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி இறந்தார். இதையறிந்து அரசாயாள் அலறி துடித்தார்.

விஷம் குடித்தார்

அதன்பின்னர் இறுதி சடங்குக்காக கருப்புசாமியின் உடல் அவருடைய தந்தை வீடு இருக்கும் நகலூர் கரடிக்கல் என்ற ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கணவரின் உடலை பார்த்து இரவு முழுவதும் அரசாயாள் அழுதுகொண்டே இருந்தார்.

நேற்று முன்தினம் காலை வேதனை தாங்காமல் அரசாயாளும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இதற்கிடையே நகலூர் கரடிக்கல்லில் உள்ள மயானத்தில் கருப்புசாமியின் உடல் புதைக்கப்பட்டது.

உறவினர்கள் சோகம்

இந்தநிலையில் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசாயாளும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் கருப்புசாமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே அரசாயாளின் உடலையும் புதைத்தார்கள்.

கணவர் இறந்த மறுநாளே மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது அவர்களின் உறவினர்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story