ரெயில்களில் கட்டண சலுகை மீண்டும் கிடைக்குமா?
தர்மபுரி:
ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டணச் சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொரோனாவால் பறிப்பு
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது. இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பரிசீலிக்கலாம்
இந்தநிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது. பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
கடும் பாதிப்பு
மொரப்பூரை சேர்ந்த மோகன்ராசு (வயது 68):-
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் பலருக்கு பல்வேறு வகையான உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பலர் நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இத்தகையவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகளை பெற பெரிய நகரங்களுக்கு சென்று வர பெரும்பாலும் ரெயில் பயணத்தையே மேற்கொள்கிறார்கள். தர்மபுரி, மொரப்பூர் பகுதிகளில் இருந்து பெரும்பாலும் சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் வழங்கப்பட்ட கட்டணச் சலுகை மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் ரெயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டபோது மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் வழங்கப்பட்ட கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. இது அடிக்கடி ரெயில்களில் பயணங்களை மேற்கொள்ளும் மூத்த குடிமக்களை கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. எனவே மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
நலத்திட்டமாக கருத வேண்டும்
தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் பவுத்த பெருமாள் (64):-
மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் வழங்கப்பட்ட கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய திட்டங்களை அரசு மக்கள் நலத் திட்டமாகவே கருத வேண்டும். பயன்பெற்ற மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தில் வரவு, செலவை கணக்கிட கூடாது. நான் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த கட்டண சலுகை ரத்தால் எனக்கு பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் அடிப்படை வருமானமே இல்லாத மூத்த குடிமக்கள் கணிசமாக உள்ளனர். இவர்கள் பஸ்களில் அதிக கட்டணத்தை செலுத்தி நீண்ட தூரம் பயணிக்க இயலாது. இதனால் ரெயில் பயணங்களையே மூத்த குடிமக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். எனவே மூத்த குடி மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டண சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை
பாலக்கோட்டை சேர்ந்த ராஜம்மாள் (72):-
ஏழை குடும்பங்களை சேர்ந்த வயதானவர்கள் உடல்நல பிரச்சினைகள் காரணமாக நீண்ட தூரத்தில் உள்ள வெளியூர்களுக்கு பஸ்களில் செல்ல சிரமப்படுகிறார்கள். பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால் என்னை போன்றவர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு ரெயில்களில் சென்று வருகிறோம். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரெயில்களில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டதால் நீண்ட தூர பயணங்களை கூட குறைந்த கட்டண செலவில் மேற்கொள்ள முடிந்தது. இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு விட்டதால் எங்களை போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணங்களை மேற்கொள்ள அடுத்தவர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
மந்திரிக்கு கோரிக்கை கடிதம்
தர்மபுரி மாவட்ட ரெயில் பயணிகள் நலசங்க செயலாளர் மதியழகன்:-
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூர், பாலக்கோடு உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஓசூர், பெங்களூரு, சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள். மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் ரெயில்களில் கட்டண சலுகை வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்காலத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. இதனால் 60 வயதிற்கு மேற்பட்ட ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மூத்த குடிமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் கட்டண சலுகை வழங்க வேண்டும். இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ரெயில் பயணிகள் நல சங்கம் சார்பில் மத்திய ரெயில்வே மந்திரிக்கு கோரிக்கை மனு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பச்சை கொடி காட்டுமா?
தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையே தாராள மனதுடன் பெண்களுக்கு இலவச பயண சலுகை, முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் ரெயில்வே துறை ஏற்கனவே வழங்கி வந்த சலுகையை பறித்து நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.
எனவே ரெயில்வே நிர்வாகம் சிவப்பு கொடி காட்டி நிறுத்திவைத்திருக்கும் கட்டணச் சலுகைக்கு விரைவில் பச்சை கொடி காட்ட வேண்டும் என்பதே மூத்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.