தூத்துக்குடி, மங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 2,579 டன் யூரியா தர்மபுரி வந்தது
தர்மபுரி:
தூத்துக்குடி மற்றும் மங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 2,579 டன் யூரியா வந்தது.
யூரியா
தூத்துக்குடி மற்றும் மங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 2,579 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரங்களை தர்மபுரி ரெயில் நிலையத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மேற்பார்வையில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 1,059 டன் யூரியா லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 1,520 டன் யூரியா லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது.
9,450 டன் உரம் இருப்பு
இந்த உரங்களை பிரித்து அனுப்பும் பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மண்டல மேலாளர் முருகானந்தம், விற்பனை அலுவலர் நாகராஜ், மொத்த விற்பனையாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 9,450 டன் உரங்கள் விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை பெற்று பயனடைய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.