'ரெயிலின் மைய பெட்டியில் பயணித்ததால் உயிர் பிழைத்தேன்'ஒடிசா விபத்தில் சிக்கிய ராசிபுரம் மாணவர் கண்ணீர் பேட்டி


ரெயிலின் மைய பெட்டியில் பயணித்ததால் உயிர் பிழைத்தேன்ஒடிசா விபத்தில் சிக்கிய ராசிபுரம் மாணவர் கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2023 12:30 AM IST (Updated: 4 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ஒடிசா ரெயில் விபத்தில் உயிர் பிழைத்த ராசிபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், 'ரெயிலின் மைய பெட்டியில் பயணித்ததால் உயிர் பிழைத்தேன்' கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்

தமிழ்நாடு- மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரெயில்களில் ஒன்றான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயிலில் நேருக்குநேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருேக நாமகிரிப்பேட்டையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் விக்னேஷ் பிரபு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையை சேர்ந்த நான் மேற்கு வங்காள மாநிலம், ஹவுராவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் என்ஜினீயரிங் சயின்ஸ் டெக்னாலஜி கல்லூரியில் பி.ஆர்க். படித்து வருகிறேன். தற்போது சொந்த ஊருக்கு வருவதற்காக கோரமண்டல் ரெயிலின் மைய பகுதியில் உள்ள ஏ.சி. பெட்டியில் பயணித்தேன். நேற்று முன்தினம் இரவு ெரயில் விபத்தில் சிக்கியபோது நான் பெட்டியில் தூங்கி கொண்டிருந்தேன்.

மறக்க முடியாத நிகழ்வு

அப்போது ஏதோ அதிர்ந்தது போல் இருந்தது. மேல் படுக்கையில் படுத்திருந்தவர்கள் கீழே விழுந்தனர். நான் பயணித்த பெட்டிக்கு முன்பகுதியில் இருந்த பெட்டிகள் தான் விபத்தில் சிக்கின. மைய பகுதியில் உள்ள பெட்டியில் பயணித்ததால் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். எனினும் நான் வந்த ரெயில் பெட்டியும் பயங்கர சத்தத்துடன் சாய்ந்தது. இதனால் ரெயில் ெபட்டிக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தேன். மேலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் அறிய முடியவில்லை. மக்களின் அழுகுரல் சத்தம் மட்டும் கேட்டது. இருட்டாக இருந்ததால் எந்த இடத்தில் ரெயில் நிற்கிறது என்பதை கூட அறிய முடியவில்லை.

விபத்து நடந்த பகுதியில் அருகில் எந்த ஒரு கிராமமும் இல்லை. இதையடுத்து ரெயிலின் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்தோம். அப்போது எங்களது பெட்டிக்கு முன்பக்கம் பல பெட்டிகள் தடம்புரண்டு கிடந்தன. அழுகுரல் மட்டும் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தது. இதனால் கண்களில் கண்ணீருடன் அங்கு சென்று பார்த்தபோது பலத்த காயங்களுடன் பலர் உயிருக்கு போராடி கொண்டிருந்தது நெஞ்சத்தை உலுக்கியது. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இது இருக்கும்.

நான் வந்த ஏ.சி. பெட்டியில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பெட்டிக்குள் நுழைந்து எனது பையை எடுத்து கொண்டு வெளியே வந்தேன். மற்ற பயணிகளும் அவ்வாறு செய்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பஸ்சில் பயணம்

உயிர் பிழைத்த பயணிகளுக்காக வசதிகள் உடனடியாக செய்து தரப்படவில்லை. அவரவர் தங்களது சொந்த விருப்பத்தின்பேரில் அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். ஒரு பக்கம் மீட்பு பணிகள் நடைபெற்றாலும், மறுபக்கம் உயிர்பிழைத்த மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். ஒரு வழியாக அங்கிருந்து புவனேஸ்வர் செல்வதற்காக சில கிலோமீட்டர் தூரம் இரவில் நடந்து சென்றோம்.

அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறி புவனேஸ்வருக்கு நேற்று அதிகாலை வந்தடைந்தோம். ஏறக்குறைய 170 கிலோ மீட்டர் தூரம் பஸ்சில் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊருக்கு வந்தடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story