ரெயிலில் அடிபட்டு பெண் பலி
தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலியானது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலியானது பற்றி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் பிணம்
தஞ்சையை அடுத்த கொல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி அருள்செல்வி (வயது35). இவர் நேற்றுகாலை தஞ்சையை அடுத்த தளவாய்ப்பாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சுரேஷ், ஏட்டு சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மன்னார்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரெயில் மோதி அருள்செல்வி இறந்தது தெரியவந்தது.மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்தபோது, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து அருள்செல்வியின் உடலை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அருள்செல்வி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.