உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 ஆண்டுகள் பயணம் நிறைவு


உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 ஆண்டுகள் பயணம் நிறைவு
x

தஞ்சை - சென்னை இடையே இயக்கப்படும் உழவன் ரெயில் 10 ஆண்டுகள் பயணம் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி ரெயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

தஞ்சை - சென்னை இடையே இயக்கப்படும் உழவன் ரெயில் 10 ஆண்டுகள் பயணம் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி ரெயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மீட்டர் கேஜ் பாதை

தஞ்சை - கும்பகோணம் - விழுப்புரம் ரெயில் பாதை சுமார் 145 ஆண்டுகள் பழமையானது. இந்த பாதை வழியாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டதால் மெயின் லைன் பாதை என அழைக்கப்படுகிறது. இந்த மெயின் லைன் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது, சென்னை செல்லும் தஞ்சை மாவட்ட பயணிகளுக்கு முன்பதிவில் சுமார் 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

உழவன் எக்ஸ்பிரஸ்

தஞ்சை - விழுப்புரம் மெயின் லைன் பாதை முழுவதும் அகல பாதையாக மாற்றப்பட்டது. அப்போது பகல் நேர சோழன் விரைவு ரெயில் மற்றும் இரவு நேர போட் மெயில் ரெயில் மட்டுமே இயக்கப்பட்டது.இந்தநிலையில் சென்னை செல்ல புதிய ரெயில் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று 2013-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தஞ்சை- சென்னை இடையே புதிய விரைவு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி உழவன் என்ற பெயரில் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலை மத்திய நிதித்துறை முன்னாள் இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சையில் தொடங்கி வைத்தார்.

10 ஆண்டுகள் நிறைவு

இந்த ரெயிலில் 12 படுக்கை வசதி பெட்டிகள், 6 ஏ.சி. பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகள் உள்ளன. முக்கிய விழா நாட்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களும் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகளிவில் காணப்படும். பண்டிகை நாட்களில் கூட்டத்திற்கு ஏற்ப இந்த ரெயிலில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும்.இந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் இடம் பிடிப்பதற்கு என்று கும்பகோணம் பயணிகள் தஞ்சைக்கு சென்று அங்கிருந்து இடம் பிடித்து சென்னை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பணிகளின் சிறப்பை பெற்ற உழவன் ரெயிலின் பயணம் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

வரவேற்பு

இதை கொண்டாடும் விதமாக தஞ்சை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் மற்றும் பயணிகள், பல்வேறு வணிக சங்கங்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து ரெயில் என்ஜின் டிரைவர்கள், கார்டு, ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். மேலும் ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.


Next Story