மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- விழுப்புரம் இடையேயான ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- விழுப்புரம் இடையேயான ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
ரெயில்கள் நிறுத்தம்
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம், நெல்லை, திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவை நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பல ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
ஆனாலும் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம், திருவாரூர், நெல்லை ஆகிய ஊர்களுக்கான பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படவில்லை. நிறுத்தப்பட்ட இந்த ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரெயில்வே பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.
விழுப்புரத்துக்கு ரெயில் இயக்கம்
அதன் எதிரொலியாக மயிலாடுதுறையில் இருந்து கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விழுப்புரம் பாசஞ்சர் ரெயில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டது.
காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 9.5 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. இதற்கு கட்டணமாக ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் என்பதால் இன்று பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது.
திண்டுக்கல் சிறப்பு ரெயில் இயக்கம்
2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- நெல்லை பாசஞ்சர் ரெயில் இன்று காலை 11.35 மணிக்கு திண்டுக்கல் சிறப்பு விரைவு ரெயிலாக இயக்கப்பட்டது. இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு இன்று முதல் ரெயில் இயக்கப்பட்டது. திண்டுக்கல் சிறப்பு ரெயிலை பழையபடி நெல்லை வரை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.