போடி-சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை; மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தொடங்கி வைக்கிறார்


போடி-சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை; மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 15 Jun 2023 2:30 AM IST (Updated: 15 Jun 2023 5:41 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கனவாக இருந்த போடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்குகிறது. இதை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

தேனி

தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கனவாக இருந்த போடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்குகிறது. இதை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

ரெயில் சேவை

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மீட்டர்கேஜ் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக போடி-மதுரை ரெயில் சேவை கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில் பாதை பணிகள் தொடங்கின. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடங்கின. அகல ரெயில் பாதை திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தக்கோரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தியது.

மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ரெயில்பாதையில் மதுரையில் இருந்து தேனி வரை கடந்த ஆண்டு முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

இன்று தொடக்கம்

இதற்கிடையே அகல ரெயில் பாதை பணிகள் தற்போது போடி வரை நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து மதுரை-தேனி பயணிகள் ரெயில் சேவையை போடி வரை நீட்டிக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. அதுபோல், சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவையையும் போடி வரை நீட்டிக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது.

போடி வரை நீட்டிக்கப்பட்ட பயணிகள் ரெயில் மற்றும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா போடி ரெயில் நிலையத்தில் இன்று மாலை நடக்கிறது.

இந்த விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். விழாவில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர்.

வாரம் 3 முறை

போடி வரை நீட்டிக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது. முழுவதும் முன்பதிவு செய்தே பயணிக்க முடியும். இதற்கான முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. தேனி மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர்.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ரெயில் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் போடிக்கு காலை 9.35 மணிக்கு வந்தடையும்.

சென்னையில் இருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இந்த ரெயில் வரும். போடியில் இருந்து சென்னைக்கு செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும்.

போடியில் இருந்து சென்னைக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. தேனி மாவட்ட மக்களின் அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story