தண்டவாளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது: நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரெயில் சேவை பாதிப்பு


தண்டவாளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது: நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளியாடி அருகே தண்டவாளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே சில ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பள்ளியாடி அருகே தண்டவாளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே சில ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மின்கம்பி அறுந்து விழுந்தது

பள்ளியாடி அருகே ரெயில் தண்டவாளத்துக்கு மேல் செல்லும் மின் கம்பி நேற்று காலையில் திடீரென அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது.

அந்த சமயத்தில் அங்கு யாருமில்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நடுவழியில் நிறுத்தம்

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் காலை 8.30 மணி முதல் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாகவும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாகவும் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

அந்த வகையில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லக்கூடிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் காலை 8.40 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதே போல நெல்லை மாவட்டத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு குமரி மாவட்டம் வழியாக ஜாம்நகர் செல்லக்கூடிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூரில் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பயணிகள் கடும் அவதி

கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் புனே எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பயணிகள் ரெயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயிலும் செல்லவில்லை.

இதற்கிடையை சேதம் அடைந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணி காலை 11 மணி அளவில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டன. அந்த வகையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக 11.40 மணிக்கு புறப்பட்டது. ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ெரயில் 3 மணி நேரம் தாமதமாக வள்ளியூரில் இருந்து புறப்பட்டது. இதே போல புனே எக்ஸ்பிரஸ் ரெயில் 3.30 மணி நேரம் தாமதமாக பகல் 12.10 மணிக்கும், ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் 1.30 மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கும் புறப்பட்டது. மேலும் நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேலிக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் 3.10 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாததாலும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ரெயில்வே அதிகாரி விளக்கம்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "பள்ளியாடி அருகே பூக்கடை என்னும் இடத்தில் ரெயில்ேவ மேம்பாலத்துக்கு கீழ் தண்டவாளத்தின் மேல் செல்லும் 2 மின் கம்பிகள் திடீரென அறுந்தன. மேம்பாலத்தின் மேல் இருந்து இரும்பு கம்பி கீழே விழுந்ததால் மின்கம்பி அறுந்ததாக தெரிகிறது. மின் கம்பி அறுந்து விழுந்ததை அந்த பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பார்த்து உடனே தகவல் தெரிவித்தனர். இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அறுந்த மின் கம்பிகளை சரிசெய்யும் பணி நடந்தது. காலை 8.30 மணிக்கு கம்பி அறுந்தது. காலை 11 மணிக்கு அதை சரி செய்து விட்டோம். மேலும் மின் கம்பிகள் அறுந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.


Next Story