உளுந்து தொகுப்பு செயல்விளக்க திடல் அமைக்க விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


உளுந்து தொகுப்பு செயல்விளக்க திடல் அமைக்க விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
x
திருப்பூர்


மடத்துக்குளம் வட்டாரத்தில் உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க வேளாண் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டது.

250 ஏக்கர்

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் பயறு வகை திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் வட்டாரத்தில் நடப்பு 2022-23 ம் ஆண்டில் 250 ஏக்கர் பரப்பளவில் உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட உள்ளது.

ரூ7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த தொகுப்பு செயல் விளக்கத் திடலில் பங்குபெறும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி பாப்பான்குளத்தில் நேற்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தொகுப்பு செயல் விளக்கத்திடலின் நோக்கம் மற்றும் அதில் வழங்கப்படும் இடுபொருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

இடுபொருட்கள்

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் அரசப்பன், பயறு சாகுபடி செய்வதினால் ஏற்படும் நன்மைகளையும் அதன் ஊட்டச்சத்துக்களையும் விளக்கிக் கூறினார். உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடலில் வழங்கப்படும் இடுபொருட்களான சான்று பெற்ற விதைகளை விதைப்பதன் முக்கியத்துவம், வரிசை முறை நடவு, டிரைக்கோடெர்மா விரிடி, திரவ உயிர் உரங்கள், விதை நேர்த்தி, பயறு நுண்ணூட்டம், 2 சதவீதம் டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பூசாஹைட்ரோஜெல் பயன்பாடு பற்றியும் அதன் மானிய விபரங்களையும் விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து பயறு வகை பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பற்றி விளக்கிக் கூறினார். மேலும் இப்பூச்சிகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் இரையுண்ணிகளான பொறிவண்டு, கண்ணாடி இறக்கைப் பூச்சி, சிலந்தி மற்றும் மைனா ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைக்க இடுபொருட்கள் மற்றும் தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது


Next Story