தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால மீட்பு பயிற்சி
பேரிடர் மேலாண்மை மீட்புத்துறை சார்பில் இந்திய முழுவதும் ஒரே நாளில் பேரிடர் கால மீட்பு பயிற்சி நடைபெற உள்ளது. அதில் திருமூர்த்தி அணை மற்றும் கொழுமம் அமராவதி ஆற்றில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரையில் பயிற்சி நடைபெற உள்ளது. அணை உடைவதால் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்கள், விலங்குகள், வாகனத்தில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்பது, உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்து தவிக்கும் பொதுமக்களை மீட்பது, நீரில் மூழ்கிய உடல்களை மீட்பது போன்ற ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.
இதேபோன்று கொழுமம் அமராவதி ஆற்றில் திடீரென ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள், விலங்குகள், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மனிதர்கள், இறந்த உடல்களை மீட்பது போன்ற பயிற்சி நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை பயிற்சியில் மாவட்ட கலெக்டர், உடுமலை ஆர்.டி.ஓ. மற்றும் அனைத்து அரசு அலுவலக பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக டெல்லியில் இருந்து குழு வர உள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.