நாமக்கல்லில் இலவச திறன் பயிற்சிக்கு 153 பேர் தேர்வு


நாமக்கல்லில் இலவச திறன் பயிற்சிக்கு 153 பேர் தேர்வு
x

நாமக்கல்லில் இலவச திறன் பயிற்சிக்கு 153 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

இலவச திறன் பயிற்சி

மத்திய அரசு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக நாமக்கல்லில் தீனதயாள் உபாத்யாய கிராம கவுசல் யோஜனா திட்டத்தின்கீழ் இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் முகாம், இளைஞர் திறன் திருவிழா என்ற பெயரில் நாமக்கல் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்-மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிரியா தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு திறன் வளர்ப்பு கழகம், திறன் வழங்குனர், தனியார் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

153 பேர் தேர்வு

முகாமில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 462 பேர் கலந்து கொண்டனர். இதில் 105 பெண்கள், 48 ஆண்கள் என மொத்தம் 153 பேர் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மா.பிரியா, தாட்கோ மேலாளர் சரவணன், தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் அப்துல் லத்தீப், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் வழங்கினர்.

முன்னதாக தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், திறன் பயிற்சிகள் குறித்து அந்தந்த துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் மாலதி, மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், திறன் பயிற்சி பெறுவோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


Next Story