பொதுமக்கள், சுய உதவிக்குழுவினருக்கு தூய்மை நகரத்துக்கான பயிற்சி
உடுமலை நகராட்சி சார்பில், "என் குப்பை என் பொறுப்பு"என்ற தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை நகராட்சி சார்பில், "என் குப்பை என் பொறுப்பு"என்ற தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சி சார்பில் "என் குப்பை என் பொறுப்பு"என்ற தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் கடந்த 3-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை நாட்களில் ஒவ்வொரு சுகாதார மண்டல பகுதிகளில், தூய்மை பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்கும்படி வீடுகள் தோறும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று உடுமலை எம்.பி.நகர் குடியிருப்பு பகுதியில்,நகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணியை நகராட்சி தலைவர் மு.மத்தீன் தொடங்கிவைத்தார்.
திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி, உடுமலை தளிசாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் தேஜஸ் மஹாலில் நடந்தது. பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கி பேசினார். நகராட்சி ஆணையாளர் பி.சத்யநாதன் முன்னிலை வகித்து பேசினார்.
திருப்பூரைச்சேர்ந்த பேராசிரியர் வீரபத்மன் பொதுமக்களுக்கு பயிற்சி அளித்து பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.