ஒருநாள் புத்தாக்க பயிற்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி சிவகங்கையில், மாவட்ட கலெக்டர் மதுசூதன் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி சிவகங்கையில், மாவட்ட கலெக்டர் மதுசூதன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெண்களின் முன்னேற்றத்திற்கென பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை காக்கின்ற வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய ஊட்டச்சத்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தில் 6 மாதம் முதல் 60 மாதம் வரையில் மொத்தம் 46,712 குழந்தைகளும், 6,753 கா்ப்பிணிகளும், 5,564 பாலூட்டும் தாய்மார்களும் என மொத்தம் 59,029 பயனாளிகளுக்கு இணை உணவுகளும், 2 வயது முதல் 5 வயது வரையிலான மொத்தம் 23,590 குழந்தைகளுக்கு மதியஉணவும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி விளக்க கையேட்டை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, சிவகங்கை நகர சபை தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரமேஸ்வரி மற்றும் அனைத்து நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.