தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி; 20-ந்தேதி தொடங்குகிறது
காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், பெண்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, தொழில்முனைவோர்களை உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வருகிற 20-ந்தேதி தொடங்கி, பிப்ரவரி 10-ந்தேதி வரை நடக்கிறது.
அதன்படி, திராட்சையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வருகிற 20, 21-ந்தேதிகளிலும், முருங்கை மற்றும் காய்கறி பொருட்களில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 27, 28-ந்தேதிகளிலும் நடக்கிறது. வாழையில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி 31-ந்தேதி, பிப்ரவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. தென்னை மற்றும் தானியங்களில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 7, 8-ந்தேதிகளிலும், மா சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 9, 10-ந்தேதிகளிலும் நடக்கிறது.
இந்த பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். பயிற்சி கட்டணம் ரூ.200. பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். அரசு மானியம் பெற வழிவகை செய்வதோடு, வங்கிக்கடன் பெற சென்டெக்ட் ஈட்டுறுதி கடன் வழங்கப்படும். பயிற்சியில் சேர cendect@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தெரிவித்தார்.