குறுவள மைய கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம்
திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் குறுவள மைய கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் குறுவள மைய மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசரூதின் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் அந்தந்த ஒன்றியங்களில் 6,7,8 மற்றும் 9, 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் ஆளுமைத்திறன்களையும் உடல் நலம், மனநலம், கலைத்திறன்களை யும் வளர்க்க இப்பயிற்சி உதவும் என்றார்.
முதன்மைக் கருத்தாளர்களாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அன்புமுத்து, கிருஷ்ணமூர்த்தி, அன்பரசன், தாவீது ஆசிரியர் பயிற்றுநர்கள் சகாய சுதா, விஜயகாந்தி, காயத்ரிதேவி, நித்யஷீபா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 146 பேர் கலந்துகொண்டனர்.