பள்ளிகளில் காலை நேர வழிபாடு வழிமுறை குறித்த பயிற்சி முகாம்
நாகர்கோவிலில் பள்ளிகளில் காலை நேர வழிபாடு வழிமுறை குறித்த பயிற்சி முகாம் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பள்ளிகளில் காலை நேர வழிபாடு வழிமுறை குறித்த பயிற்சி முகாம் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் நடந்தது.
பயிற்சி
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதே சமயம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதையொட்டி பள்ளிகளில் காலைநேர வழிபாடு நடத்துவது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை வழிபாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் நடந்தது. பயிற்சிக்கு முதன்மை கல்வி அதிகாரி முருகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒத்துழைப்பு
பள்ளிகளில் அணி வகுப்புக்கான இசை அல்லது இசைக்கருவியை பயன்படுத்தி மாணவர்கள் அணி நடையில் வரச்செய்து உரிய அறிவுரை மூலம் 9.10 மணிக்கு வழிபாடு தொடங்க வேண்டும். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும். அதன்பிறகு கொடியேற்றி கொடி வணக்கம் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து கொடிப்பாடல், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி, திருக்குறள், பழமொழி, பொன்மொழி ஆகியவற்றை கூற வேண்டும்.
காலை வழிபாட்டை ஒருங்கிணைப்பதில் அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி. செயல்பாடுகளில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகப்படுத்தலாம். காலை வழிபாடு காலை 9.10 மணி முதல் 9.30 மணிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள 260-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக என்.சி.சி. அதிகாரிகள் மேற்பார்வையில் கொடி வணக்கம், அதிகாரிக்கு மரியாதை செலுத்துவது உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.