மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
தமிழகத்தில் மருத்துவ பயிற்சி பெற்ற மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையின் மூலம் அளிக்கப்பட்ட உயிர் காக்கும் மயக்க மருத்துவம், பேறுகால அவசர சிகிச்சை மற்றும் 'அல்ட்ராசவுண்ட்' ஸ்கேன் ஆகிய 6 மாதகால பயிற்சிகளை நிறைவு செய்த 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதையடுத்து, மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய சுகாதாரத்துறை மந்திரிகளுடனான மாநாட்டில் மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனான சந்திப்பின்போது, இரு மாநில டாக்டர்களுக்கு இடையே மருத்துவ பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக பேசப்பட்டது. முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேகாலயா அரசு டாக்டர்களின் பயிற்சிக்கு, தமிழ்நாடு அரசுடன் மேகாலயா அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
உயிர் காக்கும் மயக்க மருத்துவம், பேறுகால அவசர சிகிச்சை மற்றும் 'அல்ட்ராசவுண்ட' ஆகிய பயிற்சிகள் 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு 6 மாதம் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்துள்ள அவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. தரச்சான்றிதழ்கள் பெற்ற அரசு கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி மற்றும் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, எழும்பூர் ஆகிய ஆஸ்பத்திரிகளில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டது.
அரசின் பங்களிப்பு
தமிழ்நாட்டில் வேறொரு மாநில மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை. இந்த புரிந்துணர்வு செயல்பாட்டால் தமிழ்நாடு மருத்துவ துறையின் அனுபவம் மேகாலயா மாநிலத்தின் மருத்துவ துறையின் மேம்பாட்டுக்கு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேசிய அளவில் மேகாலயா மாநிலத்தில் மகப்பேறு இறப்பு சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு சதவீதம் குறைய தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இந்த பயிற்சி திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டோர்
இந்த நிகழ்வில், மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி டாக்டர். மேசல் அம்பரீன் லிங்டோ, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், மேகாலயா மாநில சுகாதாரத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சம்பத்குமார், கமிஷனர் டாக்டர் ஜோரம் பேடா, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ராம்குமார், தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சாந்திமலர், மேகாலயா மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் லிண்டம் மற்றும் டாக்டர் அல்யா, அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சுமதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.