ஆள் இல்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


ஆள் இல்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

காட்டாம்பூண்டியில் ஆள் இல்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வட்டாரம் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருகில் உள்ள காட்டாம்பூண்டியில் ஆள் இல்லா விமான தெளிப்பு (டிரோன் டெக்னாலஜி) என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன் வரவேற்றார்.

திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் மேற்பார்வையில் ஆள் இல்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடைபெற்றது.

இதில் வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையத்தை சேர்ந்த சரவணன் கலந்து கொண்டு ஆள் இல்லா விமான தெளிப்பு பற்றிய விளக்கம், அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

வேளாண்மை அலுவலர் சோபனா ஆள் இல்லா விமான தெளிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொண்டதோடு அதனால் ஏற்படும் குறைவான செலவு, குறைந்த நேரம், ஆள்குறைப்பு பயன்கள் பற்றி எடுத்துரைத்தார்.

அதோடு இப்கோ நிறுவன அலுவலர் அருண்குமார் ஆள்இல்லா விமான தெளிப்பு மருந்து கலக்கும் முறை மற்றும் நீரின் அளவு, வயலில் தெளிக்கும் நேரம், நிலத்தின் அளவு எந்திரத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் அமைப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

உதவி வேளாண்மை அலுவலர் கவுஸ்ஜான் தற்போதுள்ள திட்டங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உழவன் நண்பன் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியநாராயணன் செய்திருந்தனர்.


Next Story