ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 100 நாள் வேலை குறித்து பயிற்சி


ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 100 நாள் வேலை குறித்து பயிற்சி
x

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 100 நாள் வேலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் மற்றும் 100 நாள் வேலை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஈச்சங்கால் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக, தன்னாட்சி அமைப்பின் பயிற்றுனர் பிரபு கலந்து கொண்டு, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், ஊராட்சி மன்ற தலைவர்கள் அதனை எப்படி பயன்படுத்துவது. வேலை சம்பந்தமாக திட்ட அறிக்கை தயார் செய்து அதற்கு முறையான அனுமதி பெறுவது, இணையதளம் வாயிலாக ஊராட்சியில் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகள் உள்ளிட்டவர்களை தெரிந்து கொள்வது குறித்து காணொலி காட்சி வாயிலாக பயிற்சி அளித்தார்.

இதில் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் 100 நாள் வேலை குறித்து விளக்கமளிக்கும் புத்தகம் வழங்கப்பட்டது. முடிவில் மிட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.


Next Story