சிவகாசியில் 143 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சிவகாசியில் 143 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகாசி,
மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சிவகாசியில் 143 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயனாளிகள் தேர்வு
தமிழக அரசு சார்பில் அடுத்த மாதம் 15-ந்தேதி மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள பயனாளிகள் தேர்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி தாலுகாவில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரத்து 357 ரேஷன் கார்டுதார்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 867 பேர் அதற்கான விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து 289 முகாம்களில் இல்லம் தேடி கல்வி இயக்க தன்னார்வ தொண்டர்களிடம் கொடுத்தனர். இது மொத்த ரேஷன் கார்டுகளில் 73 சதவீதம் ஆகும். பொதுமக்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் 15 சதவீதம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தது.
பயிற்சி முகாம்
இந்த விண்ணப்பங்களை சரி செய்ய சிவகாசி தாலுகாவில் 143 அரசு அலுவலர்களுக்கு கடந்த 2 நாட்களாக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பயிற்சி முகாமை சிவகாசி தாசில்தார் லோகநாதன் தொடங்கி வைத்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், பஞ்சாயத்து செயலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் என 143 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் யாகராஜன் பயிற்சி வழங்கினார்.
கள ஆய்வு
இதற்கான ஏற்பாடுகளை வட்ட வழங்கல் அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார். சிறப்பு முகாமில் பயிற்சி பெற்ற 143 அரசு அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை சரி செய்து ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணி இன்று (புதன்கிழமை) தொடங்கி 7 நாட்கள் நடக்க உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.