545 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி


545 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

545 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பின் கீழ் 5 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகள் என்ற வகையில் பெரம்பலூர் ஒன்றியத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு எசனை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்தில் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதில் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி மையத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஒன்றியத்தில் 116 ஆசிரியர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 147 ஆசிரியர்களும், வேப்பூர் ஒன்றியத்தில் 153 ஆசிரியர்களும் மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தில் 129 ஆசிரியர்களும் என மொத்தம் 545 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் மற்றும் கணித அடிப்படை செயல்பாட்டு திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்தார். இப்பயிற்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் வரதராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story