அக்னி வீரர்களுக்கு பயிற்சி தொடங்கியது
வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அக்னி வீரர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.
குன்னூர்,
வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அக்னி வீரர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.
அக்னி வீரர்கள்
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. அக்னி வீரர்களின் முதல் குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் அந்தந்த பயிற்சி மையங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, அக்னிவீர்ஸ் வடிவில் பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அனைத்து பயிற்சி மையங்கள், உடல் பரிசோதனை, மருத்துவ பரிசோதனை, எழுத்துத் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 4 கட்ட கடினமான சோதனைகள் மற்றும் வடிகட்டுதல் செயல்முறைகளுக்கு பிறகு, முதல் குழுவினர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் எம்.ஆர்.சி. (மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்) ராணுவ முகாமிற்கு பயிற்சிக்காக வந்தனர்.
ராணுவ நெறிமுறைகள்
எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் எஸ்.கே.யாதவ், அக்னி வீரர்களை வரவேற்று, அவர்களுடன் உரையாடினார். பின்னர் பயிற்சி தொடங்கியது. இந்திய ராணுவத்திற்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட, ஒழுக்கமான, அதிக உந்துதல் மற்றும் புத்திசாலியான வீரர்களை உருவாக்க, அக்னி வீரர்களுக்கு 31 வாரங்கள் திட்டமிடப்பட்ட பயிற்சி முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.எம்.ஆர்.சி. மூலம் பயிற்சியை சீராக நடத்துவதை உறுதி செய்வதற்காக ஏராளமான பயிற்சி, உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 2023-ம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 1,500 அக்னி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி வீரர்கள் ஆயுதப்படைகள் மற்றும் தேசத்தை வலுப்படுத்துவதில் இந்தியாவின் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு வகிக்க உதவும். அவர்கள் 4 ஆண்டுகள் கட்டாயமாக பணிபுரிவார்கள். அவர்களுக்கு ஒழுக்கம், திறமை மற்றும் ராணுவ நெறிமுறைகளுடன் அதிகாரம் அளிப்பது தேசத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.