ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு டிரோன் கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி


ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு டிரோன் கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி
x

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு டிரோன் கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திண்டுக்கல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வேளாண்மைத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்க இருக்கிறது. இதில் டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்களை தெளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் கிராமங்களில் டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இந்த பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் சேரலாம். 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் உரிமம், மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61 ஆயிரத்து 100-ஐ தாட்கோவால் வழங்கப்படும்.

இந்த பயிற்சியை முடித்தால் டிரோன் ரிமோட் பைலட் உரிமம் கிடைக்கும். இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். மேலும் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம். வேளாண்மைத்துறையின் மானிய கடன், தாட்கோவின் ரூ.2¼ லட்சம் மானிய கடன் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதில் சேருவதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள், திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம் என்று மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


Next Story