பெரியகுளத்தில் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் நெல்லிக்காய் மதிப்பூட்டல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், நெல்லிக்காயில் அதிக அளவு 'வைட்டமின் சி' சத்து உள்ளது. இதனால் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதனை சாப்பிடுவதால் வாழ்நாள் அதிகரிக்கும். எனவே நெல்லிக்காயை தேன் நெல்லி, நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் மிட்டாய் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்றார்.
இந்த பயிற்சி முகாமில் தொழில்நுட்ப தலைவர் ஜானவி, பழ அறிவியல் துறை தலைவர் சரசுவதி, தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய முதன்மை செயல் அலுவலர் வசந்தன், இணை பேராசிரியர் வாணி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்களுக்கு தேன் நெல்லி, நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் மிட்டாய் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.