ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி
வேப்பந்தட்டை பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயிற்சி வேப்பந்தட்டை, பாண்டகப்பாடி, தேவையூர், கை.களத்தூர், இனாம் அகரம், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம்களில் மானாவாரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம், மண்வள மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு மற்றும் அறுவடைக்கு பின் செய்நேர்த்தி ஆகியவைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) கீதா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர் ரமேஷ், துணை வேளாண்மை அலுவலர் தமிழரசன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் பரிசோதனை திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.