பழங்குடியின தேயிலை விவசாயிகளுக்கு பயிற்சி
பழங்குடியின தேயிலை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பழங்குடியின தேயிலை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. இதற்கு இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் டாக்டர் எம்.முத்துக்குமார் தலைமை தாங்கி பேசும்போது, தேயிலை வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி பேசினார். மேலும் தேயிலை விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசின் விருது பெற்ற பந்தலூர் தாலுகா மாங்கோடு கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி பி.கே.குமரன், இயற்கை விவசாயத்தை பின்பற்றி சிறப்பு தேயிலை உற்பத்தி செய்வது குறித்து விளக்கினார்.
முகாமில் கோத்தகிரி சுற்று வட்டார 25 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின சிறு தேயிலை விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.