எழுத்தறிவு இல்லாத 23.7 சதவீதம் பேருக்கு 5 ஆண்டுகளில் பயிற்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் எழுத்தறிவு இல்லாத 23.7 சதவீதம் பேருக்கு 5 ஆண்டுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் பழனிசாமி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இயக்குனர் பழனிசாமி பேசுகையில், "புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15 வயதுக்கு மேல் எழுத்தறிவு இல்லாத மக்களை கண்டறிந்து பயிற்சி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன்மூலம் கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் எழுத்தறிவு இல்லாத 17 ஆயிரத்து 523 பேர் எழுத்தறிவு பெற்றனர். இதையடுத்து இந்த ஆண்டுக்கு 17 ஆயிரத்து 523 பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே எழுத்தறிவு மையங்களை கண்டறியும் பணி நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 76.3 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். மீதமுள்ள 23.7 சதவீத மக்களுக்கும் வருகிற 2027-ம் ஆண்டுக்கள் கல்வியறிவு வழங்க வேண்டும். 5 ஆண்டுகளில் திண்டுக்கல்லை எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும்" என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பொறுப்பாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.