`நீட்' தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


`நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி

பொன்மலைப்பட்டி, நவ.6-

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்து வேலைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார், மண்டல இணை இயக்குனர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலை தயார்

விழாவில் தொழில்துறை அமைச்சர் கணேசன் பேசும்போது, பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் பெற்று இருந்தால் எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை தயாராக உள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துடன் பேசி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

`நீட்' தேர்வுக்கு பயிற்சி

வேலைவாய்ப்பு முகாமில் சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இதில் சுமார் 214 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.

மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. அதுவரைக்கும் மாணவர்கள் பாதிக்காத வகையில் பயிற்சி தேர்வை சந்திக்க அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தவறான தகவல்

தமிழக அரசு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சர் பிரதமர் மோடியை சந்திக்கும் பொழுது நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது குறித்து தெளிவான கருத்துகளை அவரிடம் வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story