மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

பொட்டல்புதூர் கிராமத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் வட்டாரம் பொட்டல்புதூர் கிராமத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கடையம் வட்டார தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா வரவேற்றார்.

கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்தும், இதன்மூலம் நஞ்சில்லா முறையில் காய்கறி சாகுபடி செய்யலாம் என்பது குறித்தும் விவசாயிகளிடம் விரிவாக எடுத்துக் கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் திருமலைக்குமார் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதன் மானிய விவரங்கள் குறித்தும் விளக்கி கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் பொன்னாசீர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் செய்திருந்தார்.


Next Story