பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி


பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி
x

திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி

திருச்சி பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

634 விபத்துகள்

தமிழகத்தில் விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் முதல் 5 இடங்களுக்குள் திருச்சி மாவட்டம் உள்ளது. கடந்த ஆண்டு 634 விபத்துகள் நடந்துள்ளன. குடிபோதையிலும், செல்போன் பேசிக்கொண்டும், சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. 80 சதவீத விபத்துகள் ஹெல்மெட் அணியாததால் தான் ஏற்பட்டுள்ளது. 'டிராபிக் சாம்பியன்' என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்யப்போகிறோம்.

ஒரு பள்ளிக்கு 'டிராபிக் சாம்பியன்' என்ற பேட்ஜ் வழங்கப்படும். நீங்கள் (மாணவ-மாணவிகள்) உங்கள் பள்ளியில் உள்ளவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குறிப்பாக பள்ளிக்கு நீங்கள் சீக்கிரம் புறப்பட வேண்டும். உங்கள் பெற்றோர், ஆசிரியரை ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டும்படி கூற வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டினால் அதை நீங்கள் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

150 பேர் சாவு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பேசும் போது, "போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல் 400 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 550 விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளன. போக்குவரத்து விதிகளை நீங்களும், உங்கள் பெற்றோரும் கடைபிடிக்கும் போது விபத்துகளை தடுக்கலாம்" என்றார்.

தொடர்ந்து போக்குவரத்து பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் மூலம் விளக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்காக வந்த பள்ளி மாணவ-மாணவிகள் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் ஆட்டோகிராப் வாங்கினர்.


Next Story