பேரிடர் காலங்களில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கு பயிற்சி
பேரிடர் காலங்களில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கு பயிற்சி நடந்தது
காவேரிப்பாக்கம்
பேரிடர் காலங்களில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கு பயிற்சி நடந்தது
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் பருவகால மழையினால் ஏற்படும் விபத்துகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நெமிலி தாசில்தார் ரவி அறிவுறுத்தலின் பேரில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கு பயிற்சி கூட்டம் காவேரிப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமுருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சத்யமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை தாசில்தாா் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேரிடர் காலங்களில் மழை, மின்னல், காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் விபத்துகளை வருவாய், சுகாதாரம், காவல், கால்நடை, தீயணைப்பு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவேண்டும். இதனால் பாதிப்பில் இருந்து மீட்டெடுத்து, உரிய பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கலாம். பேரிடரில் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக அரசின் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் உடை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, கால்நடை துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர்.