பறவைகள் கணக்கெடுப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
பறவைகள் கணக்கெடுப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். வனத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணிக்காக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த பயிற்சி புரொஜெக்டர் மூலம் அளிக்கப்பட்டது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பறவைகளை எப்படி கணக்கெடுப்பது என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் மலர்விழி, வனச்சரக அலுவலர் முத்துமணி, வனவர் பாண்டியன், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு பேராசிரியர் அனிதா அறிவொளி மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.