விவசாயிகளின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய பயிற்சி


விவசாயிகளின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய பயிற்சி
x

நில விவரங்களுடன் விவசாயிகளின் விவரத்தை கணினியில் பதிவேற்றம் செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

பயிற்சி வகுப்பு

பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை மற்றும் வருவாய்த் துறை என 13 துறைகளின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மேற்குறிப்பிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எளிதில் பெற்று பயனடையும் வகையில் விவசாயிகளின் விவரம், அவர்களின் நில விவரங்களுடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு, சாகுபடி பயிர் விவரம் போன்ற தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

விவசாயிகளின் விவரங்கள் கணினியில் முழுவதுமாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் விவசாயிகள் தங்களுக்கான அனைத்து பயன்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்று கொள்ளலாம். மேலும், விவசாயிகள் ஒருமுறை தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துவிட்டால் ஒவ்வொரு முறையும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

கலெக்டர் தொடங்கிவைத்தார்

இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து தாசில்தார் அலுவலக நில அளவை பிரிவிற்கு சென்று அங்கு கணினியில் புலப்படம் வரையும் பணிகளையும், வட்ட வழங்கல் பிரிவிற்கு சென்று குடும்ப அட்டைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் அதன்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்த அவர் சமூக பாதுகாப்பு பிரிவில் சமூக பாதுகாப்பு திட்ட உதவிகளை வங்கிகள் மூலமாக வரவு வைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது தாலுகா அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வேளாண்மை இணை இயக்குநர் விஸ்வநாதன், தாசில்தார் விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நெடுமாறன், குடியாத்தம் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story