போலீஸ் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
போலீஸ் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு கூட்டம், பெரம்பலூர் சங்குபேட்டை மாரியம்மன் கோவில் அருகே நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, அப்பகுதி மக்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களுக்கு பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் நடைமுறையில் சலுகைகள் மற்றும் கல்விக்கான வழிமுறைகள் உள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் போலீசில் பணியாற்ற விருப்பப்பட்டால், அவர்களுக்கு போலீசில் சேருவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
வேலை வாய்ப்பு
சிறுவர் மன்றம் அமைத்து சிறுவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு தற்போது தங்களது வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகளை சந்திக்கிறார்கள் என்பது குறித்து கலந்துரையாடினா். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், துணை சூப்பிரண்டுகள் பழனிசாமி (பெரம்பலூர் உட்கோட்டம்), வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்), மதுமதி (பயிற்சி), இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டா்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.