ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்
சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைக்கக் கூடாது என்றும், ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும் என்றும் பயணிகள் கருத்து தொிவித்துள்ளனா்.
ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர் வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தைத்தான்.
பஸ்களில் பல சோதனைகளுக்கு இடையே பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவது இல்லை. அதே நேரத்தில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது சாதாரண காரியமல்ல. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை. பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.
சாத்தியம் இல்லை
அவசரமாக பயணம் செய்பவர்கள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளை நாடிச்செல்கிறார்கள். ஆனால் அவை சாதாரண மக்களுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமாவது இல்லை.
எனவே சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் ரெயில்களில் வசதிகளை மேம்படுத்துவதுடன் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும். இதுபற்றி பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
கூடுதல் பெட்டிகளை இணைக்க..
விழுப்புரம் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகி பிலால் முகமது:-
குறிப்பிட்ட ரெயில்களில் சாதாரண டிக்கெட்டில் முன்பதிவு பெட்டியில் பயணிக்கலாம் என்ற ரெயில்வேயின் அறிவிப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. ஆகையால் முக்கிய ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பெரும்பாலான ரெயில்களில் முன்பதிவு பெட்டியில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் வருவதே இல்லை. சாதாரண கட்டணம் டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டியில் பெரும்பாலானவர்கள் பயணிக்கிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தினர், பயணச்சீட்டே எடுக்காமல் பயணித்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் இருக்கின்றனர். இதனால் பயணிகளின் உடைமைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. அதோடு வடமாநிலத்தினர், ரெயில் பெட்டிகளை சுகாதாரமற்ற முறையில் அசுத்தப்படுத்துகிறார்கள். குறிப்பாக பான்பராக், புகையிலை பயன்படுத்துவது, புகைபிடிப்பது என்று சக பயணிக்கு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறார்கள். ரெயில்வே நிர்வாகம் இதை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு போய்சேரும் பெரும்பாலான ரெயில்களில் கழிவறை முற்றிலும் துப்புரவு செய்யப்படாமல் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும். பெட்ரோல்- டீசல் விலை உயர்வின் காரணமாக பொது போக்குவரத்தான பஸ்சை நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஆகையால் பண்டிகை காலங்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் கூடுதல் ரெயிலை இயக்க வேண்டும். சாதாரண நாட்களில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களிலும் சாதாரண கட்டண பெட்டிகளை கூடுதலாக இணைத்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் ரெயில்வே துறைக்கு வருவாயும் பெருகும்.
குறைக்கக் கூடாது
விழுப்புரத்தை சேர்ந்த ராஜகுமார்:-
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் எக்காரணத்தை கொண்டும் குறைக்கக்கூடாது. அதே வேளையில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கைகளை அனைத்து ரெயில்களிலும் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மேலும் முன்பதிவு வசதியுள்ள (2-ம் வகுப்பு இருக்கை வசதி) இருக்கை பெட்டிகளை அதிகப்படுத்தினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். மேற்கண்ட முறைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் ஒரு ரெயிலில் அதிகப்படியான பயணிகள் பயணம் செய்ய வாய்ப்பு உண்டாகும்.
பிளாட்பாரத்தின் நீளம்
தெற்கு ரெயில்வே துறை முன்னாள் அதிகாரி சி.கே.சிவராஜ் கூறியதாவது:-
ரெயில் நிலைய பிளாட்பாரத்தின் நீளத்திற்கு ஏற்ப 19 பெட்டிகள் கொண்ட ரெயில்தான் இயக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் பிளாட்பாரங்களின் நீளமும், லூப் லைன் என்ற பிளாட்பாரம் அருகில் உள்ள மற்றொரு ரெயில் பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு தற்போது 22 பெட்டிகள் அதாவது, 21 பெட்டிகளும், 1 என்ஜினும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களில் பாமரமக்கள் பயணம் செய்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டிகள் 2-க்கு பதிலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளில் 3 பெட்டிகள் குறைக்கப்பட்டு 2 பெட்டிகள் பி-3, பி-4 என்ற பெயரில் குளிர்சாதன வசதி கொண்ட உயர்தர பெட்டியாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமானால் பிளாட்பாரத்தின் நீளமும், லூப் லைன் நீளத்தையும் அதிகரித்தால் மட்டுமே சாத்தியப்படும். பயணிகள் நலன் கருதி ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்புடையது அல்ல
திண்டிவனம் வக்கீல் வேலாயுதம்:-
ரெயில் என்பது ஏழைகளின் ரதமாக இருந்தது. தற்போது இல்லை. முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் பாதுகாப்பாக வெளியூர் சென்றுவர ரெயில் போக்குவரத்தையே விரும்புகிறோம். ஆனால் தற்போது ரெயில் பயணத்திற்கான டிக்கெட்டு எடுப்பதில் இருந்து வெளியூர் சென்று வருவது வரை பெரும் போராட்டமாக இருக்கிறது. காரணம் ரெயில்வே துறை சேவை துறையில் இருந்து முற்றிலும் வணிக மயமாகி வருகிறது. நடுத்தர வர்க்கத்தினர் பயணிக்கும் சாதாரண வகை படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை உயர்ரக குளிர்சாதன வகை பெட்டிகளாக மாற்றுவது என்பது ஏற்புடையது அல்ல. ரெயிலை சேவைத்துறை என்று கூறுவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. ஏற்கனவே முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கான கட்டணச் சலுகைகளை ரத்து செய்துவிட்டது. நடுத்தர மக்கள் பயணிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவதை கைவிட வேண்டும். குளிர்சாதன வசதி பெட்டிகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக சாதாரண வகை படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை ரெயில்களில் அதிக எண்ணிக்கையில் இணைக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் பல புதுமைகளை மேம்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டுமே தவிர இருக்கும் வசதிகளை குறைப்பது என்பது பின்னோக்கி செல்வது போல் உள்ளது. ரெயில்வே நிர்வாகத்துக்கு வருமானம் அதிகமாக வேண்டுமானால் ஏற்ப திட்டங்களை தீட்ட வேண்டும். அதை விடுத்து பெட்டிகளை குறைப்பது என்பதை ஏற்க முடியாது. அதேபோல் வெளிநாடுகளைபோல் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
முன்பதிவுகள் எளிதாக்க..
திண்டிவனம் திவ்யா:-
நீண்ட தூர பயணங்களுக்கு பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். எனவே முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக்க வேண்டும். இதற்கு எந்தவித காரணத்தையும் தெரிவிக்காமல் ரெயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும். சரக்கு ரெயிலில் 40-க்கும் மேற்பட்ட பெட்டிகளை இணைத்து வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவுக்கும், தென்னிந்தியாவில் இருந்து வட மாநிலங்களுக்கும் ரெயில் சேவை நடைபெறுகிறது. இவ்வாறு இருக்கும்போது எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், பயணிகள் ரெயிலிலும் ஏன் அதிக பெட்டிகளை இணைக்க கூடாது. மேலும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் முன்பதிவுகள் எளிதாக்க பட வேண்டும். முன்பதிவு செய்யும் பயணிகளின் காத்திப்பு பட்டியலுக்கு தகுந்தவாறு கூடுதல் பெட்டிகளை இணைக்கலாம். பண்டிகை காலங்களில் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும்.