ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்
ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும் என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர் வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தைத்தான்.
பஸ்களில் பல சோதனைகளுக்கு இடையே பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவது இல்லை. அதே நேரத்தில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது சாதாரண காரியமல்ல. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை. பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.
சாத்தியம் இல்லை
அவசரமாக பயணம் செய்பவர்கள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளை நாடிச்செல்கிறார்கள். ஆனால் அவை சாதாரண மக்களுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமாவது இல்லை.
எனவே சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் ரெயில்களில் வசதிகளை மேம்படுத்துவதுடன் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும்.
அதிகரிக்க வேண்டும்
இதுபற்றி பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் இல்லத்தரசி விஜயா:-
சமீப காலமாக ெரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் ெரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. இதனால் என்னை போன்ற பெண்கள் முன்பதிவில்லாத ெரயில் பெட்டிகளில் பயணம் செய்வது என்பது சிரமம் ஏற்படும் நிலையாக உள்ளது. மேலும் சென்னையில் குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் திடீரென்று அழைக்கும் பொழுது முன்பதிவு கிடைக்காத நிலையில் முன்பதிவு இல்லாத ெரயில் பெட்டிகளில் தான் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே முன்பதிவு இல்லாத ெரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்னை போன்ற நடுத்தர வர்க்க பெண்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும். எனவே ெரயில்வே துறை இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முன்பதிவுக்கான ெரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு விட்டதால்தான் முன்பதிவு கிடைப்பதில் சிரமம் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே 2-ம் வகுப்பு முன்பதிவு ெரயில் பெட்டிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்
பயணிகள் சிரமம்
ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சின்னதம்பி:- தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 10-க்கும் குறைவான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல ரெயில்களில் 20-க்கும் குறைவான பெட்டிகள் மட்டும் உள்ளது. இதனால் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்ய முடியாமல் போகிறது.
அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 17 பெட்டிகளும், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 14 பெட்டிகளும், செங்கோட்டை- மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் 14 பெட்டிகளும், செங்கோட்டை-மானாமதுரை ரெயிலில் 12 பெட்டிகள் மட்டும் உள்ளது. இந்த ரெயில்களில் குறைந்தது 20 பெட்டிகள் பொருத்தினால் இந்த ரெயில்களில் முன்பதிவு செய்து பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும். இதுகுறித்து கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் அதிக பெட்டிகளை இணைக்க வசதியாக பல ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை அதிகப்படுத்த வேண்டும். அதனையும் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.
வருமான இழப்பு
விருதுநகர் தனியார் நிறுவன அலுவலர் பால கணபதி:-
நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். கடந்த காலங்களை போல் அல்லாமல் தற்போது நெடுந்தூர ெரயில்களில் முன்பதிவு ெரயில் பெட்டிகள், முன்பதிவு இல்லாத ெரயில் பெட்டிகளின்எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. இதனால் ஏற்படும் வருமான இழப்பை ெரயில்வே நிர்வாகம் தட்கல், பிரீமியம் தட்கல் போன்ற முறைகளால் கூடுதல் கட்டணத்தை வசூலித்து ஈடு செய்து கொள்கிறது. இதனால் பாதிக்கப்படுவது நடுத்தர சாமானிய மக்கள் தான். எனவே ெரயில்வே நிர்வாகம் இந்த நடைமுறையை கைவிட்டு கடந்த காலங்களை போல் நெடுந்தூரங்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள மயிலாடுதுறை- செங்கோட்டை போன்ற ெரயில்களிலும் கூடுதல் ெரயில் பெட்டிகளை இணைக்கவும். அதிலும் குறிப்பாக முன்பதிவு இல்லாத ெரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும்.
முதியவர்களுக்கு தனி பெட்டி
அருப்புக்கோட்டையை சேர்ந்த தனலட்சுமி:-
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன் பதிவு இல்லாத பெட்டிகளில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் என்னை போன்ற பெண்கள் ஏறுவது சிரமமாக உள்ளது. அதிலும் விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட இடம் கிடைப்பதில்லை. கழிவறை அருகே நின்று செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த சமயத்தில் கர்ப்பிணிகள், வயதானவர்கள் படும் கஷ்டத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனவே ெரயிலில் கூடுதலாக முன் பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கவும் குறிப்பாக முதியவர்களுக்கு தனியாக ஒரு முன் பதிவு இல்லாத பெட்டி ஒதுக்க வேண்டும்
பிளாட்பாரத்தின் நீளம்
தெற்கு ரெயில்வே துறை முன்னாள் அதிகாரி சி.கே.சிவராஜ் கூறியதாவது:-
ரெயில் நிலைய பிளாட்பாரத்தின் நீளத்திற்கு ஏற்ப 19 பெட்டிகள் கொண்ட ரெயில்தான் இயக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் பிளாட்பாரங்களின் நீளமும், லூப் லைன் என்ற பிளாட்பாரம் அருகில் உள்ள மற்றொரு ரெயில் பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு தற்போது 22 பெட்டிகள் அதாவது, 21 பெட்டிகளும், 1 என்ஜினும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களில் பாமரமக்கள் பயணம் செய்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டிகள் 2-க்கு பதிலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளில் 3 பெட்டிகள் குறைக்கப்பட்டு 2 பெட்டிகள் பி-3, பி-4 என்ற பெயரில் குளிர்சாதன வசதி கொண்ட உயர்தர பெட்டியாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமானால் பிளாட்பாரத்தின் நீளமும், லூப் லைன் நீளத்தையும் அதிகரித்தால் மட்டுமே சாத்தியப்படும். பயணிகள் நலன் கருதி ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.