120 போலீசார் இடமாற்றம்


120 போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 120 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் தொலை தூரங்களுக்கு குடும்பங்களை பிரிந்து செல்வதால் அவர்கள் வேதனையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 120 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் தொலை தூரங்களுக்கு குடும்பங்களை பிரிந்து செல்வதால் அவர்கள் வேதனையில் உள்ளனர்.

போலீசார் இடமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய உட்கோட்டங்கள் உள்ளன. இந்த உட்கோட்டத்தில் 33 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள். போலீஸ், ஏட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்கள் என பல்வேறு நிலைகளில் பணியாற்ற கூடிய போலீசாரில், 3 ஆண்டுகள் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையில் பணியாற்றிய போலீசார் என சுமார் 120 பேர் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த இடமாற்ற உத்தரவு பெரும்பாலான போலீசாருக்கு அதிர்ச்சியை ெகாடுத்துள்ளது. ஏன் என்றால் இதற்கு முன்பெல்லாம் இடமாற்றம் என்றால் பணிபுரிந்த போலீஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு போலீஸ் நிலையமாக இருக்கும். இல்லாவிட்டால் போக்குவரத்து பிரிவு, கட்டுப்பாட்டு அறை, பக்கத்து சப்-டிவிசனுக்குள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

வேதனை

இந்த முறை இடமாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான போலீசார் தொலை தூரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உதாரணமாக அஞ்செட்டி, தளியில் பணிபுரிந்த போலீசார் கல்லாவி, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி பகுதியிலும் அங்கு பணிபுரிந்தவர்கள் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பக்கமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களின் குழந்தைகளையும், மனைவியையும் பிரிந்து இப்படி தொலை தூரத்தில் இடமாற்றம் செய்து விட்டார்களே என கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் பலரும் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

பரிசீலிக்க வேண்டும்

பொதுவாக போலீசார் இடமாற்றம் செய்யப்படும் போது போலீசாரிடம் 2,3 போலீஸ் நிலையங்கள் விருப்பத்தின் பேரில் கேட்பார்கள். ஆனால் இந்த முறை பெரும்பாலான போலீசார் தொலை தூரங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் குடும்பத்தை பிரிந்து வேதனையில் உள்ளோம். இடமாற்றம் செய்யப்பட்ட எந்த போலீசாரின் மீதும் புகார்கள் எதுவும் கிடையாது.

எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, போலீசாரின் குடும்ப சூழலை உணர்ந்து அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story