மின்மாற்றியில் தீப்பிடித்ததால் பரபரப்பு
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் மின்மாற்றி உள்ளது. நேற்று மதியம் திடீரென அந்த மின்மாற்றியில் பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மின்மாற்றி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் மின்மாற்றி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்மாற்றியை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இதே போன்று சுற்று வட்டாரத்தில் உள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சுற்றி மரக்கிளைகள் மற்றும் செடி, கொடிகள் படர்ந்து இருப்பதாகவும், விபத்து ஏற்படும் முன் அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.