நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 1,329 மின்மாற்றிகளுக்கு அனுமதி-ராஜேஷ்குமார் எம்.பி. தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 1,329 மின்மாற்றிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.
நாமக்கல்:
ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி தொடக்க விழா நடந்தது. ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. கலந்து கொண்டு மின்மாற்றியின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 1,329 மின்மாற்றிகளை அமைக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனுமதி அளித்து உள்ளது. அதற்காக ரூ.40 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பரிமளா, ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் கிருஷ்ணன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்திரன், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.